Friday, October 5, 2007

ராமரை நான் பார்த்திருக்கிறேன் பழகியிருக்கிறேன்.


அவன் எடுத்த அம்பு வழிதவறி

என்கண்களில் பாய்ந்துவிட்டது

அவன் அழுது துடித்துவிட்டான்

இறுதியில் அம்பில் வடிந்தது தேன்.


நான் எச்சில் வைத்து தந்த

தேன் ராட்டியை ருசித்து

சாப்பிட்டுவிட்டு

நண்பா ரொம்ப சுவை

இதுபோல கிடைக்காது என்றான்.


என் இன்னொரு நண்பனொடு

சண்டையிட்டநேரம் பார்த்து - அங்கே

வந்தான் ராமர்,

நண்பனான எனக்காக கூட

அவன் எதிராளியை

ஒருஅடி அடித்திட வில்லை


அவன் அக்காமார்கள்

அத்துனைபேரும்

14 வயசில் கட்டிப்போனார்கள்

இவன் மட்டும் யாரும் இல்லாமல்

என்னுடன் வந்துபேசுவான்


இப்போது எல்லோரும்

பத்திரிக்கையில் ராமர் எங்கிருக்கிறார்

என்று தேடுகிறார்கள்

இப்போது தான் என் ராமர்

நினைவுக்கு வருகிறான்

அவன் எங்கே?

என்று நானும் தேடுகிறேன்.


அந்த வானம் தோண்டும்

என் குழந்தை பருவ நண்பன்

ஒட்டக்கவுண்டர் பையன்

இப்போது எங்கிருக்கிறான்

என்று தெரியவில்லை


மண்வெட்டும் பணியில் இருக்கிறானாம்!

ஒரு வேளை சேதுசமுத்திர திட்டப்படி

அந்த பாலத்தின் மண்ணை தோண்ட

காத்திருக்கிறானோ என்னவோ?

No comments: