Thursday, April 28, 2011

தி ஓல்ட் பாய் (கொரிய த்ரில்லர் திரைப்படம் 18+ )





2003 ஆம் ஆண்டில் வெளியான “தி ஓல்ட் பாய்” - ஒரு த்ரில்லர் திரைப்படம்.
13 விருதுகளை (ஆஸ்கார் அல்ல )வாங்கி குவித்துள்ள இந்த படத்தின் இயக்குனர் சென் - வூக் –பார்க்.


படத்தின் கதாநாயகன் டே சுஹோ (dae-su ho) தன் மகளின் பிறந்த நாள் அன்று குடித்துவிட்டு தெருவில் தகராறு செய்ததற்காக கைது செய்யப்பட்டு காவல் நிலையத்தில் அமர்ந்திருப்பதில் இருந்து படம் துவங்குகிறது.


அங்குவரும் சுஹோவின் நண்பன் அவரை ஜாமீனில் எடுத்து வீட்டிற்கு அழைத்து செல்கிறார். செல்லும் வழியில் வீட்டிற்கு போன் செய்து பேசிக்கொண்டிருக்கும்போது சுஹோ
மாயமாகிறார். சுஹோவை கடத்திச்சென்றவர்கள் ஹோட்டல் அறைபோன்ற ஒரு இடத்தில் அடைத்து வைக்கின்றனர்.
எத்தனை நாள் தெரியுமா? சுமாராக 5500 நாட்கள் அதாவது
15 வருடங்கள்.


தான் எதற்காக கடத்தப்பட்டோம்? எங்கு அடைக்கபட்டிருகிறோம்? எப்போது விடுவிக்கபடுவோம்? என்று தெரியாமல், பழிவாங்கும் ஒரே வெறியுடன் உடற்பயிற்சி செய்து, 15 வருடம் டிவியை மட்டுமே நண்பனாகக் கொண்டு, தப்பிக்கும் முயற்சியையும் கைவிடாமல் வாழ்கிறார், சுஹோ.


திடீரென ஒருநாள் ஒரு கட்டிடத்தின் மாடியில் அவர் விடுவிக்கபடுகிறார். அப்போது தன் மனைவி இறந்துவிட்டதையும், மகள் வெளிநாடு சென்றுவிட்டதையும் அறிந்துகொள்ளும் சுஹோ,


தன்னை இந்த நிலைக்கு கொண்டுவந்த மனிதனை, தேடி கண்டுபிடிப்பதே தனது குறிக்கோளாகக் கொண்டு திரிகிறார்.


ஒருநாள் ஒரு ஹோட்டலுக்கு சாப்பிட செல்லும் சுஹோ, அங்கு மயங்கிவிழுகிறார். அங்கு பணிபுரியும் இளம் பெண்ணான மீதோ(mi-do) தன்னுடைய வீட்டிற்கு அவரை அழைத்து
சென்று பார்த்துக்கொள்கிறாள்.


15 வருடம் பெண்களையே பார்க்காத சுஹோ, மிதோவை கண்டதும்
பாய்கிறார். பின்னர் தன்னை கட்டுப்படுத்திக்கொண்டு, பழிவாங்கும் வேலையே தொடர்கிறார். இந்த வேலையில் மிதோவும் உதவி செய்ய, தன்னை அடைத்துவைத்த இடத்தையும், அங்கு தனக்கு உணவு அளித்த நபரையும் கண்டுபிடிக்கிறான். சிக்கியவனை பல்வேறு சித்ரவதை செய்து தன்னை இப்படி செய்யச் சொன்னது யார் என கேட்கிறான்.


சிக்கியவன் தனக்கு எதுவும் தெரியாது எனவும் போனில் மட்டுமே தான் பேசியதாகவும் கூறி, தொலைபேசி உரையாடல் அடங்கிய டேபை (Tape) தருகிறான். பிறகு அங்குள்ள அடியாட்களுடன் சண்டைபோட்டு தெருவில் மயங்கிவிழும் சுஹோவை, டாக்ஸி
ஒன்றில் ஏற்றி சரியாக மீதோ விலாசம் கொடுத்து அனுப்புகிறான் ஒருவன்.


இதற்கிடையில் மீடோவுடன் அதிக நெருக்கம் ஏற்பட்டு அவளுடன் உறவுகொள்கிறான் சுஹோ. மீடோவின் வீட்டின் அருகிலேயே தன்னை அடைத்துவைத்திருந்ததை வூஜின் (woo-jin ) கண்டுபிடிக்கிறான்.


தான் அடைத்து வைக்கப்பட்டதன் காரணத்தை ஜூலை 5 ஆம்
தேதிக்குள் சுஹோவே கண்டுபிடிக்கவேண்டும், இல்லை என்றால் மீதோ கொள்ளபடுவாள் என்றும் எச்சரிக்கிறான் வூஜின் .


தன்னுடைய ப்ரொவ்சிங் சென்டர் வைத்திருக்கும் நண்பனின்
உதவியுடன் வூஜின் தன்னுடன் பள்ளியில் வேறு வகுப்பில் படித்தவன் என்று கண்டுபிடிக்கிறான் சுஹோ. பள்ளி இறுதி நாளன்று லேபில் வூஜின் தன்னுடைய தங்கையுடன்(soo-ah) உறவில் இருப்பதை பார்த்துவிடும் சுஹோ அதை தன் நண்பனிடம்
கூறுகிறான்.


அது புரளியாக மாறி சகோதரனுடன் உறவில் ஈடுபட்டு ஸோஅஹ் கர்ப்பமாக இருப்பதாக பள்ளி முழுவதும் பரவுகிறது. மனதில் பெரும் குழப்பம் ஏற்படும் ஸோஅஹ்விற்கு உண்மையில் தான் கர்ப்பமாக இருபதைப்போல் தோன்ற தற்கொலை செய்துகொள்கிறாள்.


தான் ஆரம்பித்து வைத்த சிறிய புரளிக்காக 15 வருடம் சிறைபிடிக்கபட்டதை கண்டறியும் சுஹோ நேராக வூஜின் வீட்டிற்கு செல்கிறான். அங்கு சுஹோவிற்கு போட்டோ ஆல்பம் ஒன்று தரப்படுகிறது. அது தன் மகள் சிறுவயது படத்திலிருந்து ஆரம்பிக்கிறது.


சில பக்கங்களை புரட்டியதுமே மீதோ தன்னுடைய மகள் என்று தெரிந்துகொள்கிறான். தன்னுடைய சொந்த மகளிடமே உறவு வைத்துக்கொண்டதை நினைத்து கதறி அழும் சுஹோ, இந்த
உண்மை மீடோவிற்கு தெரிய வேண்டாம் என்று வூஜின் காலில் விழுந்து கதறுகிறான்.


தான் ஆரம்பித்த புரளிக்கான தண்டனையாய் தன் நாக்கை அறுத்துக்கொள்கிறார் சுஹோ. சுஹோவை விட்டு லிப்டில் கீழ் இறங்கும் வூஜின் கண் முன்னே தங்கை இறந்தது நினைவில் கொண்டு வர தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொள்கிறான். பிறகு ஹிப்னாடிசம் உதவியுடன் நடந்ததை சுஹோ மாறாக முயல்வதோடு படம் முடிகிறது.


வழக்கமாக படத்தின் முடிவை நான் சொன்னது இல்லை. இந்த படத்தை பொறுத்தவரை முடிவை சொல்லவில்லை என்றால், இதை பற்றி எழுத முடியாது, ஆகையால்தான் முழு கதையும்
எழுதியுள்ளேன்.


படத்தில் எனக்கு பிடித்தவை :-
இந்த படத்தின் படத்தொகுப்பு மிகவும் அருமை. காட்சிகளை எடுத்த விதமும் அருமை. சுமார் மூன்று நிமிடம் கட் செய்யாமல் தொடரும் 15 பேருடன் சண்டைபோடும் காட்சி மிகவும் அருமையாக படமாக்கபட்டுள்ளது.
by

Sanctum (2011) - English




மனிதனின் அலுக்காத ஆசைகளில் ஒன்று, இந்த உலகில் இதுவரை யாருமே சென்றறியாத இடங்களை ஆராய்வது. அப்படி சில மனிதர்கள் மேற்கொண்ட முயற்சிகளாலேயே நமக்குப் பல நாடுகள் கிடைத்துள்ளன. அதே சமயத்தில், இந்த முயற்சிகளால் ஏற்படும் உயிர் இழப்புகளும் எண்ணிலடங்கா. எத்தனை ஆபத்துகள் இருந்தாலும், புதிய இடங்களைக் கண்டறியும் ஆசையுடன், அந்த இடத்துடன், இனி வருங்காலம் முழுவதும் தனது பெயரையும் சேர்த்தே சரித்திரம் நினைவு கொள்ளும் என்ற வெறியும் சேர்வதால், மனிதன் மேற்கொள்ளும் அபாயகரமான பயணங்கள் பெரும்பாலும் அழிவிலேயே முடிகின்றன.

இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன், பல வருடங்களுக்கு முன்னர் - 1989ல் இயக்கிய படம், 'The Abyss'. இப்படத்தின் கதை நினைவிருக்கிறதா? ஆழ்கடலில் ஒரு நீர்மூழ்கிக் கப்பல் மூழ்கிவிட, அக்கப்பல் மூழ்கிய காரணத்தை அறிய ஒரு பயணத்தை மேற்கொள்ளும் குழுவினரைப் பற்றிய படம் அது. அப்படி ஆழ்கடலில் தேடும் படலத்தை நிகழ்த்துகையில், அவர்களுக்கு நிகழும் அனுபவங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்தும். நான் இப்படத்தை மிகச்சிறு வயதில், கோவையில் ஒரு தீபாவளியன்று (அல்லது பொங்கல்) பார்த்தேன் (இதனுடன் வெளியான மற்ற படங்கள்: குணா, தளபதி, பிரம்மா, தாலாட்டு கேக்குதம்மா). எந்தப் படத்துக்கும் டிக்கட் கிடைக்காமல், அபைஸ் சென்றோம். வெளியே வந்தபோது, படம் எனக்கு மிகப்பிடித்திருந்தது. இந்தப் படத்தை நினைவு கொள்ளுங்கள்.

அதேபோல், 'The Descent' என்றொரு திகில் படம். யாருமே சென்றறியாத ஒரு குகையை ஆராயச் செல்லும் ஒரு குழு - முழுவதும் பெண்கள் - என்னவாகிறது என்பதே படம். இந்தப் படத்தில், அந்தக் குகையினுள் வாழும் விசித்திர ஜந்துக்களால் உண்ணப்பட்டு ஒரு பெண்ணைத் தவிர அனைவரும் இறந்துவிடுவார்கள். இப்படத்தையும் நினைவு கொள்ளவும்.

சரி. இப்போது, ஸாங்க்டம் படத்தைப் பார்ப்போம்.

பஸிஃபிக் கடலில், ஆஸ்த்ரேலியாவுக்குச் சற்று மேலே, பாபுவா ந்யூ கினி தீவுகளில் இருக்கும் ஒரு மிகப்பெரிய குகையே எஸா - ஆலா. பூமியின் பரப்பில் மிகப் பிரம்மாண்டமான ஒரு பாழி. அந்தப் பாழியினுள், கிட்டத்தட்ட இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் இந்தக் குகை தொடங்குகிறது. எண்ணிலடங்கா சிறிய குகைகளும் பாதைகளும் கொண்டு, இதுவரை யாருமே சென்றறியாத ஒரு பாதாள உலகமாக விளங்குகிறது இது. ஃப்ராங்க் மெகையர் என்ற உலகின் மிகப் பிரசித்தி பெற்ற குகை ஆய்வாளர், இரண்டு வருடங்களாக முயற்சி செய்து, இந்தக் குகையின் ஒரு குறிப்பிட்ட இடம் வரை சென்றடைந்து இருக்கிறார். அதற்கு மேல் என்ன இருக்கிறது என்பது யாருக்குமே தெரியாது. அதே சமயம், இந்த ஆராய்ச்சியை ஸ்பான்ஸர் செய்யும் கார்ல் ஹக்ஸ்லி என்ற அமெரிக்கச் செல்வந்தர், பல நாட்களாகக் காத்திருந்தும், இந்தக் குறிப்பிட்ட இடத்துக்கு மேல் ஃப்ராங்க் உள்ளே செல்லாததால், இந்த முயற்சியே இன்னும் சில நாட்களில் கைவிடப்பட இருக்கிறது என்று எச்சரிப்பதோடு மட்டுமல்லாமல், தானே இந்த குகைக்கும் வருகிறார். உடன் வருவது, அவரது காதலி விக்டோரியா மற்றும் ஃப்ராங்க்கின் மகனான ஜோஷ்.

ஃபராங்க், குகையின் அடியாழத்தில் இருக்கிறார். அவருக்கு முன்னே, ஒரு பெரிய ஆறு. அங்கே, பல மில்லியன் வருடங்களாகப் பெய்த மழையின் காரணமாக, குகையின் இந்தப் பகுதியில் இருந்து, அந்த ஆறு தொடங்குகிறது. இனி மேற்கொண்டு செல்லவேண்டும் என்றால், இந்த ஆற்றின் உள்ளே நீந்தி, அதன் அடியாழத்துக்குச் சென்று, அங்கிருந்து பயணத்தைத் தொடர வேண்டும். அது மிக ஆபத்தாக இருக்கலாம் என்பதனாலேயேதான் ஃப்ராங்க் மேற்கொண்டு செல்லாமல் இருக்கிறார். ஆனால், கார்ல், பண உதவியை நிறுத்தப்போவதாகச் சொல்வது, ஃப்ராங்க்கினுள் இருக்கும் வெறிகொண்ட ஆராய்ச்சியாளரை உசுப்பிவிடுகிறது. எனவே, மேற்கொண்டு தனது பயணத்தைத் தொடர முடிவு செய்கிறார்.

மேலே, கார்ல், விக்டோரியா மற்றும் ஜோஷ் குழுவினர், குகைக்குள் நுழைகிறார்கள்.



இதுதான் படத்தின் துவக்கம். இதற்குப்பின் என்ன ஆகிறது என்று மிகச்சில படங்கள் பார்த்திருக்கும் குழந்தை கூட சொல்லிவிடும்.

வழக்கமான அட்வென்ச்சர் படங்களைப்போலவே, இதிலும் பல ‘க்ளிஷே’க்கள் பொங்கி வழிகின்றன. ஒரு பயணம் என்றால், அதில் இருப்பவர்கள் பலரும் இறந்துவிட வேண்டும் என்ற ஹாலிவுட் விதி, இதில் தப்பாமல் உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது. அதேபோல், எந்தப் பயணத்திலும், எப்படியும் ஓரிரண்டு பெண்கள் இடம்பெறுவது ஹாலிவுட் வழக்கமல்லவா? அதேபோல் இதிலும். அப்பெண்களுக்கு வழக்கமாக நேரும் முடிவே இப்படத்தின் பெண்களுக்கும் தப்பாமல் நேர்கிறது. முடிவில் யார் உயிர் பிழைப்பார்கள் என்பது, படம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே நமக்குத் தெரிந்துவிடுவது, இப்படத்தின்
பலவீனம். இந்தப் படத்தில் லாஜிக்கை எதிர்பார்ப்பதில் அர்த்தமில்லை என்றாலும், படத்தின் கதாபாத்திரங்கள் திடீர் திடீரென, பள்ளிக் குழந்தைகளைப் போல் எடுக்கும் முட்டாள்தனமான முடிவுகள், சற்றே எரிச்சலை வரவழைக்கின்றன. அதேபோல், பெண்கள் இதுபோன்ற பயணங்களுக்கு லாயக்கற்றவர்கள் என்ற மடத்தனமான ஹாலிவுட் க்ளிஷே இதில் இருமுறை நமக்குச் சொல்லப்படுகிறது.

படத்தில் அவர்கள் சொல்ல முயன்றிருக்கும் ஒரு விஷயம் - ஃப்ராங்க்குக்கும் ஜோஷுக்கும் இடையே நிலவும் தந்தை - மகன் உறவு - முதல் சில காட்சிகளில் அப்பட்டமாகப் பொய்த்துவிட்டாலும், படத்தின் இறுதியில் சற்றே வொர்க் ஔட் ஆகிறது. இப்படத்தில், கார்ல் செய்யும் குரங்கு சேஷ்டைகளைப் பார்க்கையில், எனக்கு நாம் மேலே பார்த்த The Descent படத்தின் ஜந்துக்கள் நினைவு வந்தன.

இப்படத்தின் சந்தேகமில்லாத, மிகச்சிறப்பான பலம் - படத்தில் வரும் குகை. அட்டகாசமான ஒரு மர்ம உலகம், நமது கண் முன் மெதுவாக விரிகிறது. ஆராய்ச்சியாளர்களின் பார்வையின் ஊடாகவே நமக்குக் காட்டப்படும் இக்குகை, இயற்கையின் முன், மனிதன் ஒரு பேக்டீரியாவுக்குச் சமம் என்று தெளிவாக உணர்த்திவிடுகிறது.

படத்தின் சில காட்சிகள், Abyss படத்தை ஒத்திருக்கின்றன. எனவே, கட்டாயம் அதேபோன்ற ஒரு ஜந்து இதில் வரும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம். ஆனால் நல்லவேளையாக எந்த ஜந்துவும் வரவில்லை. அந்த மட்டில், இயக்குநர் பிழைத்தார்.

இறுதியாக, படத்தைப் பற்றிச் சொல்லவேண்டும் என்றால், இதன் சிஜிக்காக ஒருமுறை தியேடரில் பார்க்கலாம். இதனை டவுன்லோட் செய்து பார்த்தால், படம் கட்டாயம் சற்றே மொக்கை போடும். எனவே, 3D திரையரங்கில் சென்று பாருங்கள்.

பி.கு - ஜேம்ஸ் கேமரூன், இப்படத்தின் இணைத்தயாரிப்பாளர் மட்டுமே.

forwarded