Friday, May 23, 2008

நான் நடிகன் அவன் திருடன்





என் போன் நம்பர் உங்களுக்குத் தெரியுமா? 94444 மற்றதை சொல்ல மாட்டேன், நீங்கள் அடிக்கடி போன் செய்து என்னை தொந்தரவு செய்வீர்கள். ஆனால் ஒரு முறை என் நம்பரை சொன்னாலே யார் மனதிலும் உடனடியாக பதிந்துவிடும். அந்த நம்பரை வாங்குவதற்காக என்றோ ஒருநாள் தொலைப்பேசித்துறையின் விழா ஒன்றில் நடிகன் என்றமுறையில் சிறப்பு விருந்தினனாக கலந்தகொண்டபோது நண்பராக கிடைத்த மண்டல மேளாலரின் பரிந்துரையின் பேரில் கிடைத்த பேன்ஸி நம்பர்.
ஒரு நாளைக்கு என் போன் மட்டும் என்னிடம் இல்லையென்றால், என் வாழ்க்கையின் முக்கியமான நாளை இழந்துவிட்டேன். காரணம் நான் ஒரு வளரும் நடிகன் அவ்வப்போது வில்லன், அவ்வப்போது குணச்சித்திரன் ரொம்பப்பேருக்கு என்னைப்பிடிக்கும் உங்களுக்கும் பிடித்திருக்கலாம். ஒரு அழைப்பை விட்டாலும் என் வாழ்க்கையில் முக்கியமான இழப்பு. அந்த நம்பரை நான் இரண்டு நாட்கள் பிரிந்து இருக்கும்படி ஆகிவிட்டது, என் வாழ்க்கையில்.....
ரூ.45,528 கொடுத்து வாங்கிய காஸ்ட்லி செல்போன் மற்றும் ரூ.1000 மெமரி கார்டுடுடன் சேர்ந்து இருந்தது என் செல்போன். இன்டர்நெட்டில் விலை விசாரித்து, நண்பர்களிடம் பேசி, நம்பகமான வியாபாரிகளிடம் கேட்டு என் மனைவி எனக்காக முதன்முதலில் வாங்கித்தந்த பரிசு அந்த செல்போன். அதை கம்யூட்டராக கூட பயன்படுத்தலாம். அன்று நான் ஒரு விழாவிற்கு சென்றிருந்த போது யாரோ அதனை திருடிவிட்டார்கள். நிச்சயமாக திருடிவிட்டார்கள். தேடிப்பார்த்தபோது அது எனக்கு தெளிவாக புரிந்தது.
யாராரிடமோ கேட்டுப்பார்த்தேன் பயனில்லை வேறு வழியின்றி அந்த ஏரியா போலிஸ்ஸ்டேஷனில் புகார் கொடுத்தேன். ஒருபடி மேலே போய் அந்த ஏரியாவிற்கான கமிஷனரிடமே போனைபோட்டு சொன்னேன்.(அவரும் எனக்கு நண்பர், நடிகன் என்றாலே அப்படித்தான்)
மறுநாள் காலையிலேயே எனக்கு போலிஸ் ஸ்டேஷனிலிருந்து என் மனைவியின் செல்லுக்கு அழைப்பு வந்தது. செல்போன் கிடைத்துவிட்டது. அவசரமாக ஓடினேன். 46,528 ரூபாயின் மதிப்பு எனக்குத் தெரியும். நடிகனாவதற்கு முன்னால் நான் ஆட்டோ ஓட்டிக்கொண்டிருந்தேன், ஒவ்வொரு ரூபாயும் சம்பாதிப்பதற்கு எங்கள் உடல் உஷ்னத்தில் வேகவேண்டும். நேற்று இரவெல்லாம் எனக்குத் தூக்கமே வரவில்லை. யாரெல்லாம் கூப்பிட்டார்களோ..... என் மனைவி எனக்காக வாங்கிக் கொடுத்த முதல்பரிசு இப்படி காணாமல் போய்விட்டதே... காசு யாருடையதாக இருந்தால் என்ன அந்தப் பரிசை வாங்கிக் கொடுத்த அன்பு அவளுடையதாயிற்றே!
ஸ்டேனஷனுக்குள் நுழைந்ததுமே வாங்கசார் வாங்க.. நல்வரவேற்றார் இன்ஸ்பெக்டர்... ஒருவன் ஓரத்தில் ஜட்டியுடன் உட்கார்ந்திருந்தான். அடி வாங்கிய தழும்புகள் நிறைய அவன் உடலில் இருந்தன, எல்லாம் பழைய வடுக்கள். இவன் தான் சார் எடுத்திருக்கான். டேய் சொல்லுடா... அவரின் அதட்டல் சத்தம் அடங்குவதற்குள் ஆமா சார்... ஆமா சார்... பதறினான் அந்த ஜட்டிக்காரன். எனக்கு வந்த கோபத்தில் அவன் கன்னத்தில் பொளேரென அறைந்தேன்.. எங்கடா என் செல்போனு... அவர், இங்க இருக்குசார்... குடுத்துட்டான்.
உண்மைதான் அது என் செல்போனை போலத்தான் இருந்தது. ஆனால் சிம்கார்டை காணவில்லை. எடுத்த உடனே கழட்டி வீசிருக்கான் சார், பரவாயில்லை நான் கம்பெனிக்கிட்ட பேசிட்டேன் இன்னைக்கு சாயங்காலமே... அதே நம்பர்ல சிம்கார்டு தர்றதா சொல்லிட்டாங்க.. இப்ப நீங்க செல்போன எடுத்துட்டு போங்க... இருங்க.... கொஞ்சம் பார்மாளிட்டீஸ் இருக்கு எல்லாத்தையும் நானே எழுதி கொண்டு வந்துர்றேன் ஒரே ஒரு கையெழுத்து மட்டும் போட்டுட்டு வாங்கிட்டுப் போயிருங்க.. கமிஷனருக்கும் போன் போட்டு செல்போன் வாங்கிக்கிட்டேன்னு சொல்லிருங்க. கொஞ்சம் இப்படி உக்காந்திருங்க வந்துர்றேன். செல்போனுடன் உள்ளே போனார்.
பக்கத்தில் ஜட்டியுடன் உட்கார்ந்திருந்த அவனை பார்க்கவே அருவருப்பாக இருந்தது, முகத்தை திருப்பிக்கொண்டு உட்கார்ந்தேன். எவ்வளவு பிரபலமானவன் நான், ஒருக்கடைக்கு போனால் கூட சார் உங்கள அந்தப் படத்துல பாத்தேன் சார், நீங்க சூப்பரா நடிச்சிருக்கீங்க... சார்.. எங்கவீட்ல இருக்க குட்டீஸ்க்கு உங்கள ரொம்ப புடிக்கும் சார் உங்கள மாதிரியே செஞ்சுக்காட்டுவாங்க... கூட்டமாக கூடிவிடுவார்கள்... என்னிடமே செல்போனை திருடுவதற்கு இவனுக்கு என்ன துணிச்சல்....
அண்ணே... குரல் கேட்டு திரும்பினேன். அவன் தான் அந்த திருடன் தான், என் வாழ்க்கையின் ஒருநாளை சாப்பிட்ட அந்த சட்டையில்லாத உடலான், சதையும் இல்லாத... அந்தத்தே........ என்னைக் கூப்பிட்டான். நல்லாயிருக்கியா.. இன்ஸ்பெக்டர் வருகிறாரா வரவில்லை என்பதை எட்டிப்பார்த்து உறுதிசெய்துகொண்டு, தொடர்ந்து பேசினான் புதுசா என்னப்படம்னேன் நடிக்கிற.... இதுல ஒரு கையெழுத்துப் போட்டுக் குடுன்னே, என் பொண்ணுக்கு உன்னை ரொம்ப புடிக்குமுன்னே, அவ இதைப் பாத்தா ரொம்ப சந்தோஷப்படுவா.. சட்டத்தை கசக்கி எரிந்திருந்த அந்த போலிஸ் ஸ்டேசனின் குப்பைப் பேப்பர் ஒன்றை நீட்டினான். ஏன்னேன் அப்படி பாக்குற... நான் திருடன் தாண்ணே, ஆனா உன்...... செல்போனப் போயி நான் திருடுவனாண்ணே... நீ நடிச்ச தலையூரு படத்தைப் பாத்துட்டு.. அதுல அடியாளுத் தலைவனா நடிச்சிருந்தப் பாருண்ணேன்.. என் மனசுலயே நிக்குதுன்னேன் இன்னைக்கும்... நீ எப்புடி அந்த படத்துல ரவுடி ஆனியோ அதே மாதிரி தான்னேன் நானும் ரவுடி ஆனேன். என் பிரண்ஸ§க அத்தனை பேரையும் என் செலவுல அந்தப் படத்துக்கு கூட்டிப்போனேன். அந்தப் படத்தை மட்டும் நான் 9 தடவை தியேட்டருல போயி பாத்தேன் தெரியுமா.... உன்னை மாதிரியே இருக்குறதா என் பிரண்ஸ¨க என்னையக் கிண்டல் பண்ணுவாங்கண்ணே.....

நான் திருடன் தான் அண்ணேன் ஆனா உன் செல்போன நான் திருடல அண்ணன்...

நான் திருடன் தான் அண்ணேன் ஆனா உன் செல்போன நான் திருடல அண்ணன்...

அப்படியே அவனைப் பார்த்துக் கொண்டே இருந்தேன். திரும்ப திரும்ப அந்த வார்த்தை எனக்குள் ஒலித்துக் கொண்டே இருந்தது. என் சப்தநாடிகளும் அடங்கிப் போய்விட்டன.. அவனை அடித்த கை உதறல் எடுத்துக் கொண்டிருந்தது. போலிஸ் ஸ்டேஷனிலிருந்து வீட்டுக்கு வந்தது வரை என்ன நடந்ததென்று எனக்குத் தெளிவாக தெரியவில்லை..
13 நாட்கள் ஆகியது, நான் என் உடல் நலம் தேருவதற்கு காய்ச்சல், வயிற்றுப் போக்கு... 9 கிலோ என் எடை குறைந்து போனது.... தினம்தோறும் ஒரு மணி நேரமேனும் செல்போனை இப்போதெல்லாம் ஆஃப் செய்து வைத்து விடுகிறேன்.
காசு யாருடையதாக இருந்தால் என்ன அந்தப் பரிசை வாங்கிக் கொடுத்த அன்பு அவனுடையதாயிற்றே!

3 comments:

மோகன் கந்தசாமி said...

அப்றம் அந்த செல்போன யார் தான் எடுத்தது?

////அவனை அடித்த கை உதறல் எடுத்துக் கொண்டிருந்தது./////
பாத்திங்களா!, இந்த சப்ப கட்டு தான வானாங்கறது, யாரையும் கை நீட்டி அடிக்ககூடாது சார், தற்காப்பு தவிர!

துளசி கோபால் said...

ஐயோ......... இப்படி அந்தரத்தில் விட்டால் என்ன அர்த்தம்?

செல்ஃபோனை யார் களவாடியது?

தயவு செய்து இந்த வேர்டு வெரிஃபிகேஷனைத் தூக்கிருங்களேன்.

மங்களூர் சிவா said...

/
துளசி கோபால் said...

ஐயோ......... இப்படி அந்தரத்தில் விட்டால் என்ன அர்த்தம்?

செல்ஃபோனை யார் களவாடியது?
/

அதானே!



/

தயவு செய்து இந்த வேர்டு வெரிஃபிகேஷனைத் தூக்கிருங்களேன்.
/

ரிப்பீட்டேய்